பிரிட்டனைச் சேர்ந்த மூன்று பள்ளிமாணவர்கள் ஒரு வித்தியாசமானதொரு முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு பால்வினை நோய் இருந்தால் அதைஉடனடியாகக் கண்டுபிடித்து எச்சரிக்கும் ஆணுறைகளை உருவாக்குவதில் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
இவர்களின் இந்த முயற்சிக்கு ஏகப்பட்ட ஆதரவு குவிந்து வருகிறது. கருத்தடை சாதன நிறுவனம் ஒன்று ஏற்கனவே இவர்களை தொடர்புகொண்டு பேசிவருகிறது. இத்தனைக்கும் இந்த மூன்று பேருமே இன்னமும் பள்ளிக்கூடத்தைக் கூட தாண்டவில்லை.
இந்த மூவரில் தாண்யால் அலி மற்றும் சிராக் ஷா ஆகிய இருவருக்கும் 14 வயது. மூன்றாவது நபரான முவாஸ் நவாஸுக்கு 13 வயது தான். இந்த மூன்றுபேரும் சேர்ந்துதான் இந்த நிறம் மாறும் ஆணுறையை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கிறர்கள்.
தமது வித்தியாசமான இந்த முயற்சிக்காக இவர்கள் மூவரும் தொழில்நுட்பத்துறையில் இளம்தலைமுறையினருக்கான பரிசையும் வென்றிருக்கிறாரகள்.
இவர்கள் தங்களது இந்த கண்டுபிடிப்புக்கு S.T.Eye என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக பெயரிட்டுள்ளனர். அதாவது பால்வினை நோய்களை கண்டறியும் கண் என்பது அதன் பொருள்.
உடலுறவில் ஈடுபடும் இருவரில் யாருக்கேனும் பால்வினை நோய்த்தொற்று இருந்தால் இந்த ஆணுறை உடனே நிறம் மாறிவிடும். அதுவும் பால்வினை நோய்க்கேற்ப ஆணுறையின் நிறமாற்றம் நிகழும்படி இந்த ஆணுறைகளை உருவாக்க விரும்புவதாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
“வாழ்க்கையை எளிமையாகவும் சுளுவாகவும் மேம்பட்டதாகவும் இருக்கும்படியானதொரு பொருளை நாங்கள் உருவாக்க விரும்பினோம்” என்கிறார் முவாஸ்.
இந்த ஆணுறைகள் எப்படி நிறம் மாறுகின்றன?
இவர்களின் திட்டம் இதுதான். ஆணுறையில் நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் பூசப்பட்டிருக்கும். ஆணுறையில் தடவப்பட்டிருக்கும் இந்த நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் உடலுறவின்போது சுரக்கும் உடல் திரவங்களைத் தொடும். அப்படியானத் தொடர்பு ஏற்படும்போது, பாக்டீரியாக்கள் உள்ளிட்ட பால்வினை நோயைத்தோற்றுவிக்கும் கிருமிகளின் புரதங்களைத் தொட்டதும் வேதியியல் ரீதியில் அதற்கு எதிர்வினையாற்றும்.
இந்த எதிர்வினையானது இந்த ஆணுறைகளின் நிறத்தை மாற்றுவதன் மூலம் உடலுறவில் ஈடுபடுபவர்களில் யாரோ ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பால்வினை நோய் இருப்பதை கண்டுபிடித்து எச்சரிக்கும் என்று விளக்கினார் தாண்யால்.
“எச்ஐவி வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்க செய்யப்படும் எலிசா பரிசோதனையில் இப்படியான நிறமாற்றம் தான் அடிப்படையாக இருக்கிறது. அதைப்பார்த்ததும் தான் எங்களுக்கு இந்த யோசனை உதித்தது”, என்கிறார் தாண்யால்.
இந்த ஆணுறையின் இரண்டு பக்கமுமே இந்த நிறமாற்றம் நடக்கும் என்கிறார்கள் இந்த மூன்று மாணவர்கள்.
அதிலும் வெவ்வேறு பால்வினை நோய்க்கும் வெவ்வேறு நிறத்தை இவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். கிளமிடியா நோய்க்கு பச்சை நிறம். பிறப்புறுப்பில் தோன்றும் புண்களுக்கு ஊதா நிறம். சிப்லிஸ் நோய்க்கு நீல நிறம் மற்றும் ஹெர்பிஸ் நோய்க்கு மஞ்சள் நிறம் என்பதாக இவர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள்.

Post a Comment

أحدث أقدم